நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களின் ஊடாக எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லை என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க ஊழலை கட்டுப்படுத்துவதற்கும் விகிதாசார தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கும் ஏற்கனவே திருத்தங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே விஜயதாச ராஜபக்ச இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்
‘நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் குறித்து மக்கள் அறிந்திருப்பது மிகவும் முக்கியமான ஜனநாயக அம்சமாகும். தேர்தல் திருத்த சட்ட மூலமும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் முன்வைக்கப்பட்ட தேர்தல் திருத்தங்கள் மூலம் தேர்தலை ஒத்திவைக்கும் திட்டம் இருப்பதாக சமூகத்தில் சில பேச்சுக்கள் எழுந்துள்ளன. ஆனால் இந்தத் திருத்தங்கள் மூலம் தேர்தலை ஒத்திவைக்க எதிர்பார்க்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எதிர்காலத்தில் இரண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அதன் போது எந்தவொரு வேட்பாளரும் இந்த தேர்தல் திருத்தம் குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்கலாம். பொதுமக்களுக்கும் இது தொடர்பாக தமது முடிவை எடுக்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.