முன்னாள் கமாண்டோ படையினர் கூலிப்படையாகச் செயல்பட்டமை வெளிச்சம்
கொழும்பு – 20 ஆகஸ்ட் 2025
இலங்கையின் பிரபலமான பாதாள உலகக் குழு தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் கெஹல்பத்தர பத்மே என்பவரால் வழிநடத்தப்படும் குழுவில், முன்னாள் இராணுவ கமாண்டோ படை வீரர்கள் கூலி கொலையாளிகளாகச் செயல்பட்டு வருவதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணைகளின் போது, இராணுவ கமாண்டோ படை பிரிவிலிருந்து தப்பிச் சென்ற 18 முன்னாள் படைவீரர்கள் இந்தக் குழுவில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர் என பாதுகாப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, முன்னாள் கமாண்டோ படைவீரர்களில் ஒன்பது பேர் பெஹலியகொட குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை விளக்க மறையலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்ற விசாரணைகளில், கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய சகாவான ‘கமாண்டோ சலிந்த’ என்பவர் இந்த முன்னாள் படைவீரர்களை பயன்படுத்தி ஒரு கூலிப்படையை உருவாக்கியதாக தெரியவந்துள்ளது.
மேலும், இந்த முன்னாள் கமாண்டோ வீரர்கள் பெரும்பாலும் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாகவும், அவர்களுக்கு தேவையான போதைப்பொருட்கள் மற்றும் வாழ்வாதாரத்திற்குத் தேவையான நிதியுதவிகளை பாதாள உலகக் குழு வழங்கி வருவதாகவும் விசாரணைகள் வெளிப்படுத்துகின்றன.
இந்த அடிப்படையில், அவர்கள் கூலி கொலைகளை மேற்கொண்டு வந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் இராணுவ வீரர்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் தற்போது விசாரணைகளின் கீழ் உள்ளதாகவும், மீதமுள்ள சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Editor: கதிர்