கொழும்பு | 08 செப்டம்பர் 2025
பொறுப்புக்கூறல் விசாரணைகளை முன்னெடுப்பது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை மகிழ்விப்பதற்கோ திருப்திப்படுத்துவதற்கோ அல்ல, மாறாக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய அரசின் கடமையாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
“உண்மையில் கடந்த ஆட்சிகள் ஜெனிவாவில் உறுதிமொழிகளை வழங்கியும் அவற்றை உள்நாட்டில் நிறைவேற்றத் தவறியதால் தான் இலங்கை மீது குற்றச்சாட்டுகள் வலுப்பெற்றுள்ளன.
எமது அரசு கொள்கை ரீதியாக மனித உரிமை விசாரணைகளை முன்னெடுக்க உறுதியானது.
செம்மணி மனிதப் புதைகுழி உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளிலும் சுயாதீனமான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. யாரையும் பாதுகாப்பதற்காக அல்ல, நீதியை நிலைநிறுத்துவதற்காகவே இவ்விசாரணைகள் நடைபெறும்.”
இறுதிப் போர் காலத்தில் இடம்பெற்ற “வெள்ளைக்கொடி” சம்பவம் மாத்திரமல்ல, எந்தவொரு மனித உரிமை குற்றச்சாட்டுகளும் விசாரணைக்குட்படுத்தப்படும் என்றும், அதற்கு அரசு எந்தவித தடையும் இருக்காது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், விசாரணைகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை சர்வதேசத்திடமிருந்து பெற அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், ஆனால் விசாரணைகளின் பொறுப்பாளர்கள் இலங்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
“மக்களுக்கு, குறிப்பாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, இந்த அரசு அவர்களுக்குரியது என்பதை உணர்த்துவதே எமது நோக்கம். ஜெனிவா சக்கரத்தில் சிக்கிக் கொள்ளாமல் வெளிவருவதே எமது முன்னுரிமை. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கே அரசு முதன்மை அளிக்கும்” என பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.
Editor: கதிர்