நெடுந்தீவு படுகொலை சந்தேகநபர் பகீர் வாக்குமூலம்!
நெடுந்தீவில் ஐவர் கோரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் ஊர்காவற்துறை பொலிஸாரால் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மீளவும் வெளிநாடு செல்வதற்காக கொள்ளையடிப்பதற்காகவே கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே குறித்த வீட்டிற்கு சென்று தங்கியதாகவும் அவர்கள் உறவினர்கள் என்பதால் நெடுந்தீவு சென்றால் அங்கு தான் தங்குவதாகவும் கொலை செய்து கொள்ளையடிக்கும் திட்டத்துடனேயே சென்று தங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அதிகாலை 4.30 மணியளவில் கத்தியால் வெட்டி ஐந்து பேரையும் கொலை செய்துவிட்டு நகை. கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்ததாகவும் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை கிணறொன்றில் போட்டுவிட்டு படகு மூலம் புங்குடுதீவு வந்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொள்ளையடித்துச் சென்ற 21 பவுண் நகைகள், கையடக்க தொலைபேசிகள் என்பன சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. கொலை செய்யும் போது வீட்டு உரிமையாளரால் வளர்க்கப்பட்ட நாய் குலைத்து தடுத்ததால் நாயினை வெட்டிய நிலையில் நாய் கழுத்தில் காயத்துடன் தப்பியுள்ளது.
சந்தேகநபர் ஜேர்மனியில் இருந்து கொலை முயற்சி குற்றத்தினால் நாடு கடத்தப்பட்டவர் எனவும் அவர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதால் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் இன்று நெடுந்தீவு அழைத்துச் செல்லப்பட்டு தடையப் பொருட்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெடுந்தீவில் உள்ள ஆலய மகா கும்பாபிஷேகத்திற்கு யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மற்றும் புலம்பெயர் நாடொன்றில் இருந்து வந்திருந்த ஐவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நெடுந்தீவு சென்று இறங்குதுறைக்கு அருகில் உள்ள குறித்த மூதாட்டியின் வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.