முல்லைத்தீவில் இராணுவத்தினர் விரட்டிய போதே இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு – 3 சிப்பாய்கள் கைது
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், இராணுவத்தினரின் விரட்டலுக்கு உள்ளான இளம் குடும்பஸ்தர் முத்துஐயன்கட்டுக் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சிவநகரில் அமைந்துள்ள 12ஆம் சிங்கப் படையணி முகாமை அப்புறப்படுத்தும் பணிகள் சமீபத்தில் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், 07.08.2025 இரவு வேளையில், அகற்றப்பட்ட இரும்பு மற்றும் வெளிப்புறப் பொருட்களை எடுத்துச் செல்ல முகாமுக்குள் அனுமதியின்றி நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை, முகாமிலிருந்த இராணுவத்தினர் விரட்டியுள்ளனர்.
விரட்டலின் போது, தப்பிச் செல்ல முயன்ற ஒருவரான இளம் குடும்பஸ்தர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தையடுத்து, உள்ளே நுழைந்தவர்கள் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், ஒரு சிப்பாயும், திருட்டு முயற்சிக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட மேலும் இரண்டு சிப்பாய்களும் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவரும் 09.08.2025 அன்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, 19.08.2025 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.
இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகள் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின்படி விசேட குழுவினரால் வெளிப்படையாகவும் பாரபட்சமின்றியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், ஒட்டுசுட்டான் பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளனர்.