யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோத சொத்துச் சேர்த்த 8 பேருக்கு எதிராக விசாரணை
தேதி: 24 அக்டோபர் 2025
இடம்: யாழ்ப்பாணம்
வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு, அத்துமீறி சொத்துச் சேர்த்ததாக சந்தேகிக்கப்படும் எட்டுப் பேருக்கு எதிராக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு சொத்துச் சேர்ப்பவர்களை அடையாளம் காணவும், அவர்களிடம் இருந்து அந்தச் சொத்துக்களை மீட்டெடுக்கவும் விசேட பொலிஸ் பிரிவொன்று சமீபத்தில் நிறுவப்பட்டுள்ளது. அதற்கமைவாக, யாழ்ப்பாணத்திலும் குறித்த எட்டுப் பேரைச் சார்ந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்த எட்டுப் பேரில் மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்திலும், மேலும் ஐவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
விசாரணைத் தகவல்களின் படி, ஒருவருக்கு போதைப்பொருள் கடத்தல் மூலம் சொத்துச் சேர்த்தல் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள ஏழு பேருக்கும் வன்முறைச் செயற்பாடுகள் மூலம் சட்டவிரோத சொத்துச் சேர்த்தல் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வன்முறைகளில் ஈடுபட்டு சொத்துச் சேர்த்தவர்களையும், அவ்வாறான செயற்பாடுகளை திட்டமிட்டு ஒழுங்கமைத்தவர்களையும் அடையாளம் கண்டுகொள்ள எதிர்வரும் நாட்களில் சிறப்புப் புலனாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என தெரியவந்துள்ளது.
Editor: கதிர்
