யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராச வீதி பகுதியில் நேற்று முன்தினமிரவு மோட்டார் சைக்கிள் மெக்கானிக் ஒருவர் அடித்தும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் கோப்பாய், இராச வீதியில் மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையம் ஒன்றை நடாத்தி வந்த ரவீந்திரன் அஜித் (30) என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவதினம் தனது மெக்கானிக் கடையிலிருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்ற போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாள்வெட்டு, கொட்டான்களால் தாக்கப்பட்ட நிலையில், காயத்துடன் வீட்டுக்கு தப்பியோடிச் சென்றுள்ளார்.
உடனடியாக நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அந்த சமயத்தில் வீட்டில் மனைவி, மனைவியின் பெற்றோர், மனைவியின் சகோதரர்கள் இருவர் இருந்தனர்.
அப்போது வீதியில் வாகன சத்தம் கேட்டதாகவும், நோயாளர் காவு வண்டி வருவதாக தாம் நினைத்ததாகவும் எனினும், முகத்தை கருப்பு துணியால் மூடிக்கட்டியபடி, ஹெல்மெட் அணிந்த 4 பேர் அஜித்துடன் உட்கார்ந்திருந்த குடும்பத்தினரை அங்கிருந்து ஓடும்படியும் செல்லாவிட்டால், குடும்பத்தினரையும் வெட்டப் போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து, குடும்பத்தினர் வீட்டு வளவை விட்டு வெளியே ஓடிச்சென்ற பின்னர், ஒரு அலறல் சத்தம் கேட்டதாகவும், திரும்பி வந்து பார்த்த போது, அஜித் இரத்த வெள்ளத்தில் சடலமாக காணப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அஜித் காதல் திருமணம் புரிந்தவர். தம்பதியினருக்கு 5 வயதில் பிள்ளை உள்ளது. எனினும், குடும்பத்தினரை அவர் தாக்கி வருவதனால் குடும்பத்திற்குள் சுமுகமான சூழல் நிலவவில்லையென குறிப்பிடப்படுகிறது.
தனக்கு வெளியார் சிலரால் அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டு, அஜித் கடந்த சில மாதங்களாக வாள் ஒன்றை பாதுகாப்பிற்காக வைத்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
வெளியில் செல்லும் போது, மோட்டார் சைக்கிளிற்குள் வாளையும் எடுத்துச் செல்வதாக அவரை தெரிந்தவர்கள் குறிப்பிட்டனர்.
எனினும் கொலை சம்பவம் நடந்த இடத்தில் வாள் எதுவும் காணப்படவில்லை. வீட்டிற்கு அண்மையில் அவர் மீது முதல் முறை தாக்குதல் நடந்த இடத்திலும், அங்கு விழுந்துள்ள அவரது மோட்டார் சைக்கிளிற்குள்ளும் வாள் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.