நானு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த டிக்கிரி மெனிகே பயணிகள் ரயில், தடம் புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
குறித்த ரயிலின் மூன்று பெட்டிகள் இன்று (21) காலை 7.15 மணியளவில், தடம் புரண்டுள்ளது.
ஹட்டன் மற்றும் கொட்டகலை ரயில் நிலையங்களுக்கு இடையில் சிங்கமலை ரயில் சுரங்கப்பாதைக்கு அருகில் 109 ¼ மைல் கல்லுக்கு அருகில் குறித்த ரயில் தடம் புரண்டுள்ளது.
தடம் புரண்ட பெட்டிகளில் ஒன்று, ரயில் திணைக்களத்திற்குச் சொந்தமான கட்டிடத்தில் மோதியதால், கட்டிடத்திற்கும் ரயில் பாதைக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை செல்லும் ரயில்கள் ஹட்டன் தொடருந்து நிலையம் வரையிலும், பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை செல்லும் அனைத்து ரயில்களும் கொட்டகலை தொடருந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு ரயில்களுக்கும் இடையில் அரச பேருந்துகளை கொண்டு பயணிகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன் தொடருந்து நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.