தலையில் வெட்டுக்காயங்களுடன் இளம் குடும்பஸ்தர் மீட்பு!
வவுனியா செட்டிகுளம் பகுதியில் தலையில் வெட்டுக் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவர் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
செட்டிகுளம் கங்கன்குளம் பகுதியிலிருந்து இன்று (07) அதிகாலை மீட்கப்பட்ட குடும்பஸ்தர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செட்டிகுளம் கங்கன்குளம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியம் கண்ணன் எனும் 33 வயதான இளம் குடும்பஸ்தரே வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்று(06) மாலை நான்கு மணியளவில் கங்கன் குளத்திலுள்ள வீட்டிலிருந்து சண்முகபுரம் சென்றுவருவதாக கூறிச் சென்றுள்ளார். இரவாகியும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் குறித்த நபர் கங்கன்குளம் சந்தியில் வெட்டுக்காயங்களுடன் வீதியில் கிடப்பதாக இவரது மனைவிக்கு கிடைத்த தகவலையடுத்து காயங்களுடன் கணவரை மீட்டு நோயாளர் காவு வண்டியில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.