புத்தூர் மேற்கு நவக்கிரியில் இளைஞன் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் கடத்தல்!
யாழ்ப்பாணம் புத்தூர் நவக்கிரியில் இளைஞன் ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளதாக உறவினர்களால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு நிகழ்ந்துள்ளது.
புத்தூர் மேற்கு நவக்கிரியைச் சேர்ந்த அருந்தவராசா சயந்தன் எனும் 30 வயது இளைஞனே இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இரவு 9.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரம் வீட்டு வளாகத்தில் இருந்து ஒருவர் ஓடுவதை அவதானித்து அந்த நபரை துரத்திச் சென்றுள்ளார். இதன் போது வீட்டின் முன் பக்கம் உள்ள தோட்ட வெளியில் நின்றிருந்த மூவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் இளைஞனைத் துரத்திச் சென்றுள்ளனர்.
நீண்ட நேரமாகியும் இளைஞன் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் தேடியபோது வீட்டிலிருந்து 400 மீற்றர் தூரத்தில் அவரது கைத்தொலைபேசி காணப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 12ம் திகதி வீட்டிற்கு வந்த இனந்தெரியாத குழுவினர் இளைஞன் வீட்டில் இல்லாத நிலையில் இளைஞனின் தந்தை மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அவர் தற்போதும் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவர் சில நாட்களிற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12ம் திகதி வாள்வெட்டு தாக்குதலை ஐந்து பேர் கொண்ட கும்பல் மேற்கொண்டதாகவும் அவர்களில் இருவரே கைதுசெய்யப்பட்டதாகவும் மூவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.