சிங்கள தேசியக் கட்சிகளையும் ஒட்டுக் குழுக்களையும் புறக்கணிப்போம்_ ஆனல்ட்!
அன்பிற்கும் பெரு மதிப்பிற்குரிய தாயக மக்களே இது கார்த்திகை மாதம். மாவீரர்கள் மாதம். மாவீரர்களை தெய்வங்களாக வணங்கும் நாங்கள் சிங்கள தேசியக் கட்சிகளை புறக்கணிப்பதோடு ஒட்டுக் குழுக்களையும் தமிழ் தேசியம் என்ற பெயரில் வரும் ஒட்டுக் குழுக்களையும் புறக்கணிக்க வேண்டும்.
யாழ் மாவட்ட விளையாட்டு கழகங்கள் பல வேட்பாளரும் முன்னாள் யாழ் மாநகர முதல்வருமான ஆர்னல்டை ஆதரித்து கலந்துகொண்ட கலந்துரையாடலில் முன்னாள் யாழ் மாநகர முதல்வர் ஆனல்ட் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:-
தமிழ் மக்களின் இன்ப பரம்பலை சிதைக்கும் சிங்கள குடியேற்றங்களை நிறுவியது இந்த சிங்கள தேசியக் கட்சிகள். வடக்கு கிழக்கு இணைப்பை பிரித்தவர்கள் தேசிய மக்கள் சக்தி என்று தற்போது தங்களை அழைத்துக் கொள்ளும் JVP யினர், இவ்வளவு நாசகார திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்ட போது ஆதரவாக செயல்பட்ட ஒட்டுக் குழுக்களையும் தமிழ் மக்கள் மறந்துவிடக் கூடாது.
சிங்கள கட்சிகளை ஆதரித்தால் எதிர்காலத்தில் இனவாத செயற்பாடுகளை எதிர்க்க முடியாத சூழ்நிலை தமிழர் தரப்பிற்கு ஏற்படும். அதேபோல் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட வரும் சர்வதேச பிரதிநிதிகள் சிங்கள கட்சிகளுடனேயே பேச்சுவார்த்தை நடத்தும் நிலை ஏற்படும்.
தற்போது இன நல்லிணக்கம் பேசுபவர்கள் தேர்தல் முடிவடைந்ததும் மாவீரர் நாள், முள்ளிவாய்க்கால் நினைவு நாள் போன்றவற்றை தடை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எனவே இவ்வாறான இனவாத செயற்பாடுகளை எதிர்க்க தமிழர் தரப்பு பலமானதாக இருக்க வேண்டும்.
காலங்காலமாக தமிழர்களின் சுயாட்சி கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஒரே கட்சி தமிழரசுக் கட்சி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.சலுகைகளுக்கு சோரம் போகும் ஒட்டுக் குழுக்களையும் புறக்கணித்து தமிழரசுக் கட்சியை பலப்படுத்த தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றார்.
முன்னாள் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் இலக்கம் 2 இல் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.