ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தெஹிவளை மற்றும் பேருவளை பிரதேசத்தில் அமைந்துள்ள 2 சொகுசு வீடுகள் அல்கொய்தா மற்றும் தௌஹீத் ஜமாத் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக உண்மைகள் வெளியாகியுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம முன்வைத்த விடயங்களை பரிசீலித்த பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம், ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அந்த வீடுகளின் உரிமையாளர்கள் தாக்கல் செய்த 2 அடிப்படை உரிமை மனுக்களை நிராகரிக்குமாறும் கோரியுள்ளார்.
இந்த மனுக்கள் நேற்று (26) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் வெளியான தகவல்களின் அடிப்படையில் குறித்த இரு வீடுகளிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்ரம நீதிமன்றில் தெரிவித்தார்.
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் லுக்மான் தாலிஃப் என்ற நபர் இந்த வீடுகளின் உரிமையாளர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்ததாக அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி தெரிவித்ததோடு, குறித்த வீடு தௌஹீத் ஜமாத் மற்றும் அல்கொய்தாவின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், குறித்த வீடுகள் தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பான வகுப்புகளை நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி மேலும் தெரிவித்துள்ளார்.
தமக்கு வழங்கப்பட்ட திருப்திகரமான தகவல்களின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இந்த வீடுகளை பொலிஸாருக்குக் காவலில் வைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதால் மனுதாரர்களின் அடிப்படை மனித உரிமைகள் இந்த உத்தரவின் மூலம் மீறப்படாது என அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் குறித்த மனுக்களை நிராகரிக்குமாறு நீதிமன்றில் மேலும் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.