இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் வகையில் விரிவான மூலோபாய அடிப்படையில் நாம் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நேற்று (20) நடைபெற்ற உள்நாட்டு இறைவரி ஆணையாளர் சங்கத்தின் 19ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாம் அனைவரும் ஒன்றிணைந்து தற்போதைய சவால்களை எதிர்கொண்டால், அடுத்த ஒரு சில வருடங்களில் இலங்கையின் பொருளாதார சுபீட்சத்தை உறுதிசெய்யவும் பொருளாதார சவால்களை வெற்றிகொள்ளவும் முடியும்.
“இந்நாட்டின் வர்த்தகத் துறையில் உள்ள சவால்கள் மற்றும் அதிக போட்டித்தன்மை கொண்ட பொருளாதாரத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதன்படி எமது அரசாங்கம், இந்தியா, சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை செய்து செயலாற்றி வருகிறது.
இதுமாத்திரமன்றி, அதையும் தாண்டிய வாய்ப்புகளை ஆராய்வதுடன் ஐரோப்பிய ஒன்றியத்தினுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதே எமது இலக்காகும். அந்த இலக்கை அடைவதில் எதிர்கொள்ளும் போட்டியை முறியடிக்கும் வகையில், இலங்கை தற்போது முழுமையான டிஜிட்டல் மயமாக்கலில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, டிஜிட்டல் பரிமாற்ற முகவர் நிலையம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான ஆராய்ச்சி மையமும் (AI) இணைந்து செயற்படுகின்றன.
ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் நாட்டை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்கான விரிவான திட்டத்தை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும். பசுமைப் பொருளாதாரமாக மாறுவதற்கான முயற்சிகளுடன், உலகளாவிய நிலைபேற்றுத் தன்மை இலக்குகளை அடைவதற்கு, சூழலுக்கு உகந்த நடைமுறைகளை உறுதி செய்வதன் மூலம் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைய இலங்கை செயற்பட்டு வருகிறது.- என்றார்.