தனி நாட்டுக்காக போராட கஜேந்திரகுமார் தயார் எனில் அவருடன் இணைந்து போராடத் தயார் -ஸ்ரீகாந்தா
தனி நாட்டுக்காக போராடுவதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தயார் என்றால் அவருடன் இணைந்து போராட நான் தயாராக இருக்கிறேன். ஆனால் நமது மக்கள் தயாராக இருக்கிறார்களா? இப்போதைக்கு எது சாத்தியம் என்பதை புரிந்துதான் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கூறி உள்ளோம் என தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான என் ஸ்ரீகாந்தா.
யாழ்ப்பாணத்தில் ஆறு கட்சிகளின் ஏற்பாட்டில் நடந்த கருத்தரங்கில் நேற்று முன்தினம் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்.
சிங்களத் தலைவர்கள் காலம்காலமாக தமிழர்களை ஏமாற்றி வந்திருக்கிறார்கள். எமக்கு 13ஆவது திருத்தத்தை நாடுவதைத் தவிர இப்பொழுது ஒரு தெரிவும் இல்லை. இன்னொரு தெரிவும் உள்ளது தனிநாட்டுக்கு போராடுவது. அதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தயார் என்றால் நான் தயாராக இருக்கிறேன். ஆனால் எமது மக்கள் தயாராக இருக்கிறார்களா? 30 வருடகாலத்தை விட நீண்ட போரின் நினைவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் எமது மக்கள் இப்போதுதான் மெல்ல மெல்ல எழுந்து கொண்டிருக்கிறார்கள். இப்போதைக்கு எது சாத்தியம் என்பதை புரிந்து தான் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூறியுள்ளோம்.
13வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுமா? இதற்கும் அதே கதிதானா? என நீங்கள் கேட்கலாம். அது இந்தியாவின் பிரச்சினை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டது தமிழர்கள் அல்ல, இந்தியாவும் இலங்கையும் கையெழுத்திட்டன. இந்தியாவே அதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். கஜேந்திரகுமார் சொல்வதைப் போல சமஸ்டி ஒன்றும் கிடைக்காது, நாங்களும்தான் சமஸ்டியை பற்றி பேசுகிறோம், சிங்களத் தலைவர்கள் ஒருபோதும் சமஸ்டிக்கு சம்மதிக்க மாட்டார்கள்.
அப்படியாயின் ஏன் சமஸ்டியை கோருகிறோம் எனக் கேட்கலாம். இன்றைய அரசியல் சூழலில் படிப்படியாகத்தான் முன்னேறிச் செல்லலாம். 13வது திருத்தம் ஒரு ஆரம்பப்புள்ளி. சமஸ்டியை நாம் விட்டுவிடப் போவதில்லை, என்று தெரிவித்துள்ளார்.