விரைவில் 27 அரசியல் கைதிகள் விடுதலை! நீதி அமைச்சர் அலிசப்ரி!
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 27 கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
‘நீதிக்காண அணுகல்’ எனும் நடமாடும் செயற்திட்டத்திற்காக வடக்கிற்கு வருகைதந்த நீதி அமைச்சர் அலி சப்ரி ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்
அரசியல் கைதிகள் என்று சட்டத்தின் அடிப்படையில் எவரும் இல்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்வர்களே உள்ளனர். நாம் தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளோம். எதிர்வரும் காலங்களில் முழுவதும் மாற்றப்படும்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வர்களுக்கு பிணை அல்லது விடுதலை வழங்குவது தொடர்பாக ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் குழுவை அமைத்திருந்தோம்.
அக் குழுவினருக்கு கிடைத்த 44 முறைப்பாடுகளின் பரிசீலனையில் 27 கைதிகளை விடுதலை செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர்களை விரைவில் விடுதலை செய்வோம். நாம் கடந்த வெசாக் தினத்தில் 16 அரசியல் கைதிகளை விடுவித்திருந்தோம் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.