யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு மாலை ஆறு மணி வரை செயற்படும் என யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு தீர்மானங்களை அறிவித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வெளிநோயாளர் பிரிவில் அதிகளவில் சிகிச்சை பெறுவதற்கு வருகிறார்கள்.
அதன் காரணமாக வெளி நோயாளர் பிரிவை போயா தவிர்ந்த கிழமை நாட்களில் மாலை 6 மணி வரை செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.
அத்துடன் வைத்திய சாலையில் 10 மாடியில் புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான முன்னயத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.
வைத்தியசாலையில் தினமும் அதிகளவிலான நோயாளிகள் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை பெற்று வரும் நிலையில் விடுதிகளிலும் அதிகளவிலானோர் தங்கி நின்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் காரணமாக ஏற்பட்டுள்ள இட நெருக்கடி காரணமாக 10 மாடியில் புதிய கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.
ஆகவே புதிய கட்டடத்துக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியம்.” என்றார்.