நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக பதவி வகிக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ஹர்திக் பாண்டியா முதன்மை கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான மலிங்காவை அவமதித்த சம்பவத்தை தொடர்ந்து அவரை அணி தலைவர் பதவியிலிருந்து நீக்குவது தான் சரியான முடிவு என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
ஹர்திக் பாண்டியாவின் செயல் மற்றும் நடவடிக்கைகள் அந்த அணியில் உள்ள பயிற்சியாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
கடந்த சில வருடங்களாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா தலைமையில் வழி நடத்தப்பட்டு வந்தது. ஆனால் திடீரென இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தலைவராக ஹர்திக் பாண்டியாவை நியமிக்கப்பட்டிருந்தார். இது மும்பை அணி இரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது கிரிக்கெட் வீரர் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கிறார்.
மலிங்காவின் பயிற்சியில் ஐந்து கோப்பைகளை தட்டிச் சென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியிடம் படுதோல்வி அடைந்தது. ஹைதராபாத் அணி 277 ஓட்டங்களுடன் அபார வெற்றி பெற்றது.
ஹைதராபாத் அணி இவ்வளவு ஓட்டங்களை குவித்ததற்கு காரணம் மும்பை அணியின் மோசமான பந்துவீச்சு தான் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இப்படியான சூழலில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்து ஆட்டம் முடிந்த உடன் அணி வீரர்கள் கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
அப்போது மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மலிங்கா ஹர்திக் பாண்டியாவை கட்டி அணைக்க முயன்றார். ஆனால் ஹர்திக் பாண்டியா தோல்வி அடைந்த கோபத்தில் மலிங்காவை கண்டு கொள்ளாமல் அவரது கையால் தட்டி விட்டு சென்றார்.
இது மலிங்காவுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியது.இருப்பினும் அந்த சமயத்தில் அவர் அதை காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பயிற்சியாளர் மலிங்காவை மைதானத்தில் வைத்தே அவமானப்படுத்தியத்துடன் முன்னாள் அணி தலைவர் ரோகித் சர்மாவையும் மரியாதை குறைவாக நடத்தியமை இரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பது, அந்த அணியின் ஒற்றுமை தான். ஆனால் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா சக வீரர்களிடம் இதுபோல திமிராக நடந்து கொண்டு வருவது, ஒட்டு மொத்த மும்பை இந்தியன்ஸ் அணியை சீர் குழைத்து விடும் என்பதால், தற்பொழுது ஏற்பட்டுள்ள மும்பை அணியில் உள்ள பிரச்சினைக்கு ஒரே தீர்வு ஹர்திக் பாண்டியாவை தலைவர் பதவியில் இருந்து நீக்குவது தான் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.