தேதி: 27 ஆகஸ்ட் 2025
இடம்: கொழும்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது தற்போது நிலவுகின்ற சூழ்நிலை, எதிர்காலத்தில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக, நேற்று (26.08.2025) கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் தெரிவித்ததாவது:
“ரணில் விக்ரமசிங்க மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மையல்ல என நிரூபிக்கப்பட்டால், அரசின் நிலைமை என்ன ஆகும்? இன்று அவருக்கு ஏற்பட்டிருக்கும் நிலை, நாளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஏற்படலாம்.”
அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை அநுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளும் எந்த விஜயமும் அரசு விஜயமாகவே கருதப்படும். பதவியில் இருந்து விலகிய பின்னரே அவர் மேற்கொள்ளும் பயணம் தனிப்பட்ட விஜயமாக பார்க்கப்படும் எனவும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து,
அரசியல் கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் தொடர்ந்தும் இருப்பதாகவும்,
இங்கு நடைபெறும் போராட்டம் ரணில் விக்ரமசிங்க ஒருவருக்காக அல்ல, மாறாக ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கத்திற்காக என்பதையும்,
போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசு பெரிய தவறை இழைத்திருப்பதாகவும்,
அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டிருப்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், “சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்முன் சமூக வலைதளங்களில் நபர்கள் கருத்து வெளியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இது நாட்டில் சட்டத்தின் ஆட்சி எந்த நிலையில் உள்ளதென காட்டுகிறது. இத்தகைய சூழ்நிலை நீடித்தால், நாட்டில் அராஜகம் நிலவும் அபாயம் உள்ளது” என ஹிருணிகா பிரேமச்சந்திர எச்சரித்தார்.
—
✍️ Editor: கதிர்