செம்மணி சமூக புதைகுழி இனப்படுகொலை தொடர்பான விசாரணையில், பிளவுகளை ஏற்படுத்தும் அரசியலை தவிர்த்து தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து, சர்வதேச நீதிக்காக வலுவான குரல் எழுப்ப வேண்டும் என அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அவர், இன்று (04) வெளியிட்ட ஊடக அறிக்கையில், செம்மணியில் இருந்து தினமும் அகழ்ந்து எடுக்கப்படும் மனித எச்சங்கள் மக்களின் மனதை உலுக்கும் நிலையில் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும், கிரிசாந்தி குமாரசாமி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சோம ரத்தின ராஜபக்சவின் மனைவி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதி அமைச்சருக்கு எழுதியுள்ள சர்வதேச விசாரணைக்கான கடிதம், இலங்கையின் நீதித்துறை மற்றும் அரசியல் அமைப்பு தமிழர்களுக்கு நீதி வழங்காது என்பதற்கான சாட்சியாக உள்ளது என்றார்.
கடந்த காலங்களில் உண்மையை வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளர்கள், சாட்சிகள், சட்டத்தரணிகள் பலர் காணாமல் போனதையும், கொலை செய்யப்பட்டதையும் அவர் நினைவுபடுத்தினார். கிரிசாந்தி வழக்கில் குற்றவாளியான சோம ரத்தின, 400க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்ட செம்மணி சம்பவத்திற்கு சாட்சியாக இருப்பதாகவும், சர்வதேச விசாரணையில் சாட்சி அளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
தமிழர்களின் நீதி கோரிக்கைக்கு வலு சேர்க்கும் இந்தக் கடிதம், ஆட்சியாளர்களுக்கு ஒரு சவாலாகும் என்றும், தமிழ் அரசியல் தலைவர்கள் ஒருமித்து சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Editor: கதிர்