யுவதி ஒருவரின் சடலம் மீட்பு! இருவரைத் தேடும் பணி t!
வவுனியாவில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் யுவதிகள் இருவரும் இளைஞன் ஒருவரும் நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 48 பேர் நேற்று (12) புத்தாண்டினை முன்னிட்டு நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். நுவரெலியா செல்லும் வழியில் நுவரெலியா இறம்பொடை நீர்வீழ்ச்சி பகுதியில் குழுக்களாக பிரிந்து இடங்களை சுற்றிப் பார்வையிட்டுள்ளனர்.
இதில் ஆறுபேர் கொண்ட குழுவைச் சேர்ந்த ஐந்து யுவதிகளும் இளைஞன் ஒருவரும் நீர்வீழ்ச்சியில் நீராட முற்பட்ட நிலையில் திடீரென அதிகரித்த நீர் வரத்து காரணமாக யுவதிகள் இருவரும் இளைஞன் ஒருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
நீரில் அடித்துச் செல்லப்பட்ட வவுனியா நெடுங்கேணியைச் சேர்ந்த புவனேஸ்வரன் வினோதினி (18), வவுனியா கல்மடு ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை மதுசாலினி(21), வவுனியாவைச் சேர்ந்த விதுசன்(21) ஆகியோரைத் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று காலை பொன்னுத்துரை மதுசாலினி எனும் யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஏனைய இருவரையும் தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.