பதுளை உடுவரை பெருந்தோட்ட கீழ்ப்பிரிவைச் சேர்ந்த மாணவி கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் வாக்குமூலம்!
தர்மராஜா நித்யா எனும் 18 வயதான மாணவியை கொலை செய்த பதுளை கீழ்ப்பிரிவைச் சேர்ந்த இராமையா திபாகரன் எனும் 32 வயதான இளைஞன் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். இந்நிலையில் தானே கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
நித்தியா ஹாலி எலை தமிழ் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார். சர்வதேச மகளிர் தினமான 8ம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த நித்தியாவை வழிமறித்து காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். மாணவி நித்தியா மறுத்ததும் கோடாலியால் தலையில் வெட்டி படுகொலை செய்துள்ளார்.
படுகொலை செய்த இராமையா திபாகரன் அங்கிருந்து தப்பிச்சென்று உடுவரை ரயில் நிலைய பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் மறைந்திருந்துள்ளார். மாணவி நித்தியா கொலை தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
ஹாலிஎலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ருவன் குணதிலகவின் ஏற்பாட்டில் நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒருதலைக் காதலே குறித்த கொலைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட மாணவியான நித்தியா கல்விச் செயற்பாட்டில் சிறந்து விளங்கியவர் எனவும் பெற்றோர் தோட்டத் தொழிலாளர்களாக இருந்தும் மகளை நன்றாக கல்வி கற்பித்து உயர்ந்த நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்று தமது கஷ்டத்திலும் பெரும் கனவோடு கற்பித்தனர்.
தகவலறிந்து ஓடிவந்த பெற்றோர் சடலத்தினை கண்டு மயங்கி வீழ்ந்துள்ளனர். ஒரு தலைக் காதலால் கொலை செய்த பாதகனுக்கு பகிரங்க மரணதண்டனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.