ரஷ்யாவில் இலங்கை முன்னாள் சிப்பாய்க்கு எதிராக போர்க்குற்ற வழக்கு
குருநாகல் – 12.08.2025
இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவில் பணியாற்றிய முன்னாள் சிப்பாய் ஒருவருக்கு எதிராக ரஷ்யாவில் போர்க்குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டம், மாவத்தகமையைச் சேர்ந்த லஹிரு காவிந்த என்பவர், இராணுவ சேவைக்குப் பின்னர் உக்ரைன் படையினருடன் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வந்துள்ளார். அவர் மீது, ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் நடைபெற்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரஷ்யாவின் குற்றவியல் விசாரணைகளின்படி, லஹிரு காவிந்த உள்ளிட்ட உக்ரைனின் வெளிநாட்டு சிப்பாய்கள் குழுவொன்று குர்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய பிரஜைகளான பொதுமக்களை அச்சுறுத்தி, விரட்டியடித்து, கொள்ளையடித்ததுடன், சில படுகொலைகளையும் நடத்தியுள்ளனர்.
இக்குழு சில மாதங்கள் அந்தப் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த பின்னர் அங்கிருந்து அகன்றுள்ளது. இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக ரஷ்யாவில் அதிகாரப்பூர்வமாக போர்க்குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது.
லஹிரு காவிந்த, கொமாண்டோ படைப்பிரிவில் பணியாற்றிய காலத்தில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிலும் சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
—
Editor: கதிர்