“அம்மா அம்மா” என்ற கதறல் எங்கும் எதிரொலித்தது: ஒரு மகனின் இறுதித் தருணம்!
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மலேசியத் தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மலேசியத் தமிழரான 34 வயதான நாகேந்திரன் தர்மலிங்கம் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இன்று காலை தூக்கிலிடப்பட்டார். இவரது விடுதலைக்காக தாயாரும் நிறுவனங்களும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
நாகேந்திரன் அறிவுசார் மாற்றுத்திறனாளி என அவர் தரப்பு வாதங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. நாகேந்திரனின் வழக்கை இழுத்தடிக்க சட்டத்தரணிகள் முயற்சி செய்வதாக நீதிபதிகள் அதிருப்தி வெளியிட்டனர்.
மலேசியப் பிரதமர் மற்றும் மலேசிய மன்னர் ஆகியோர் கருணை காட்டுமாறு விடுத்த வேண்டுகோளும் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. நாகேந்திரனின் மரணதண்டனை உறுதியான நிலையில் தாயாரும் சகோதரர்களும் சிங்கப்பூர் சென்றனர்.
“எனது மகன் எனக்கு உயிருடன் வேண்டும்” என நீதிபதிகளிடம் தாயார் உருக்கமாக கண்ணீருடன் கேட்டுக்கொண்டார். அவரின் கண்ணீர்க் கோரிக்கையும் நீதிமன்றம் நிராகரித்தது.
சிங்கப்பூர் சட்டத்தின் படி நாகேந்திரனைச் சந்திக்க இரண்டு மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டது. கண்ணாடி தடுப்புகளுக்கு மத்தியில் உள்ள இடைவெளியில் மகனின் கைகளைப் பற்றிய தாயார் கதறி அழுதுள்ளார்.
நாகேந்திரனும் தாயாரின் கைகளைப் பற்றி “அம்மா அம்மா” என கதறி அழுதுள்ளார். அவரின் கதறல் அப்பகுதி எங்கும் எதிரொலித்தது.
இரண்டு மணி நேரம் முடிவடைந்ததும் தாயார் மற்றும் மகனின் கதறலுக்கு மத்தியில் மகனை பொலிஸார் இழுத்துச் சென்றனர். சற்று நேரத்தில் தூக்கிலிடப்படும் மகனை பார்த்து எதுவுமே செய்ய முடியாத நிலையில் தாயார் கதறியழுதார்.
இன்று காலை நாகேந்திரன் தூக்கிலிடப்பட்டார். சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது . மகனின் சடலத்தினை பொறுப்பேற்று மலேசியாவிற்கு கொண்டு செல்கிறார்.
இந்த மனதை உருக்கும் சம்பவம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களிற்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். சட்ட விரோத செயற்பாடுகள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதிக்கும் என்பதையும் அப்போது எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருப்பீர்கள் என்பதையும் நினைவில் வைத்திருங்கள் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இறுதியாக தாயார் வாங்கிவந்த ஆடைகள் அவருக்கு வழங்கப்பட்டது. அதனுடன் புகைப்படம் எடுத்து குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டுள்ளது.