தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் பாடநெறி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற 17 வயதுடைய மாணவன் 15 நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
காலி, வலஹந்துவ பகுதியைச் சேர்ந்த சேனுக தேஷான் என்ற மாணவனே மார்ச் 18ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பில் மாணவனின் உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
தனியார் உயர்கல்வி நிறுவனத்தில் பாடநெறி ஒன்றில் கலந்து கொள்வதாக அம்மாவிடம் கூறிவிட்டு அன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.
ஆனால் தனது 21 வயது காதலியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக குறித்த மாணவன் அன்று மாலையில் காதலியுடன் காலி ஜங்கள் கடற்கரைக்கு சென்றிருந்தார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் ஜங்கள் கடற்கரையில் தங்கிவிட்டுத் திரும்புவதற்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட அலையினால் இருவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
அதில், தான் உயிர் பிழைத்ததாகவும் ஆனால் தனது காதலன் நீரில் மூழ்கியதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் மாணவனின் உறவினர்களுக்கு, காதலி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து மேலதிக விசாரணைகளை ஹபராதுவை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.