திருடர்கள், உகண்டாவிற்கு கொண்டு சென்ற பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவேன் எனக் கூறிய ஜனாதிபதி இன்று நாட்டுக்கு வினோதங்களை காட்டிக்கொண்டிருக்கிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எமது நாட்டிலிருந்து திருடப்பட்ட பணத்தையும், உகண்டாவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தையும் மீளப் பெற்று, மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தில் அந்தப் பணத்தைப் பயன்படுத்தி, எமது நாடு எதிர்நோக்கும் பாரதூரமான பிரச்சினைகளுக்கு தீர்வை தருவோம் என தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்ட ஆளும் தரப்பினர் கடந்த காலங்களில் பிரஸ்தாபித்தனர்.
மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்புகளை ஏற்படுத்தினர். உகாண்டாவுக்கு எடுத்துச் சென்ற பணம் திரும்பக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கிறோம். திருடிய பணத்தை நாட்டுக்கு கொண்டு வந்து நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள் என கருதினாலும், ஜனாதிபதி தலைமையிலான ஜே.வி.பி அரசாங்கம் நாட்டுக்கு நகைச்சுவைகளை வழங்கி வருகிறது. நகைச்சுவைகளைக் காட்டி நாட்டை கொண்டு நடத்த முடியாது என்றார்.
அவிசாவளை பிரதேச கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் அவிசாவளை தேர்தல் தொகுதி அமைப்பாளர் சுதத் விக்ரமரத்னவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேர்தல் மேடைகளில் கடவுச்சீட்டுக்கான வரிசைகளை நிறுத்துவோம் என்று வீராப்பு பேசினர். இன்னும் நிலையான தீர்வை வழங்கவில்லை. MMS, WhatsApp மூலம் செய்திகள் வந்தாலும் அதனால் பிரயோக ரீதியாக எந்தப் பயனும் இல்லை. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் கடவுச்சீட்டு வரிசைக்கு தீர்வை வழங்காது வரிசையை நீடிக்கவே நடவடிக்கை எடுத்துள்ளனர். இங்கு மக்கள் எதிர்பார்த்த முறைமை மாற்றத்தால் இந்த கடவுச்சீட்டு வரிசைக்கு இந்த அரசாங்கம் தீர்வை முன்வைக்கவில்லை. முன்னைய அரசாங்கங்கள் கடைப்பிடித்து வந்த முறையையே இவர்களும் பின்பற்றி வருகின்றனர் என்றார்.