தமிழர் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு சின்னங்களை அகற்ற வேண்டும். யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் வெற்றிச் சின்னம் என்ற பெயரில் அடிமைச் சின்னங்கள் நிறுவியுள்ளனர் என நாடாளுமன்ற வேட்பாளர் பொன் சுதன் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் இராணுவத்தினரால் ‘வெற்றிச் சின்னம்’ என நிறுவப்பட்டுள்ள நினைவுச் சின்னத்திற்கு முன்பாகவே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:-
இந்த சின்னங்கள் தமிழ் மக்களின் மனதில் அடிமைச் சின்னங்களாகவே காட்சி தருகிறது. இந்த நினைவுச் சின்னங்களை கடந்து செல்லும் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் ஆறாத காயங்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது.
இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட எங்கள் மக்களின் கதறல் குரல் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
இன நல்லிணக்கம் தேவை என்று கூறிக்கொள்ளும் சிங்கள அரசியல் வாதிகள்,பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடம் நயமாக கேட்டுக்கொள்வது தமிழ் மக்களை கொன்று குவித்த நடவடிக்கைகளை நினைவுச் சின்னங்களாக அமைத்துக்கொண்டு எப்படி இன நல்லிணக்கம் தேவை என்று கூறுகிறீர்கள். இவ்வாறான நினைவுத் தூபிகள் தமிழர் பகுதிகளில் இருந்து அகற்றப்பட வேண்டும்.
இன நல்லிணக்கம் பேசும் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இவ்வாறான நினைவுத் தூபிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இரு நாடு ஒரு தேசம் என தாங்கள் தான் தமிழ் தேசிய வாதிகள் எனக் கூறிக்கொள்ளும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த அடிமைச் சின்னத்தை அகற்ற இதுவரை குரல் கொடுக்காதது ஏன் எனவும் கேள்வியெழுப்பினார்.
சமூக செயற்பாட்டாளர் பொன் சுதன் யாழ் கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் தண்ணீர் குழாய் சின்னத்தில் இலக்கம் 6 இல் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.