மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு திங்கட்கிழமை (16) இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதிபவனில் காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.
இதன்போது, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வரவேற்று அளித்தனர்.
அத்துடன், சிறப்பு இராணுவ அணிவகுப்பு மரியாதையும் இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.
நேற்று (15) மாலை சுமார் 5.30 மணியளவில் ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் பயணித்த விமானம் இந்தியாவின் புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தது.
அங்கு, தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். முருகன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இராஜதந்திரிகள் குழுவினர் ஜனாதிபதியை விமான நிலையத்தில் வரவேற்றனர்.