அடுத்த வருடம் முதல் ஒரு கிலோகிராம் நெல்லுக்கான உற்பத்திச் செலவு விஞ்ஞான ரீதியில் கணக்கிடப்பட்டு நெல் மற்றும் அரிசிக்கு உத்தரவாத விலை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு நியாயமான இலாபம் கிடைக்கும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் மூன்று இலட்சம் மெட்ரிக் தொன் நெல்லை உத்தரவாத விலையில் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும், நுகர்வோருக்கு அநீதி இழைக்காத வகையில் அரிசியின் விலையை நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்குச் சொந்தமான 350 நெல் களஞ்சியசாலைகள் புனரமைப்புப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அரசாங்கத்திடம் உலர்த்தும் இயந்திரம் இல்லை என தெரிவித்த விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, அதற்கான பணிகளை முன்னைய அரசாங்கங்கள் செய்யாமையின் விளைவுகளை அனுபவிக்க நேரிட்டதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் உடனடி பதில்கள் இல்லையென்றாலும் அரசாங்கம் சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்களுடன் இணைந்து இந்த தருணத்தை சமாளித்து அடுத்த பருவத்தில் நியாயமான விலையில் நெல்லை கொள்வனவு செய்யும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.