சம்பூர் மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு: இலங்கை இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட 35 வருட பழைய படுகொலை மீண்டும் வெளிச்சத்திற்கு
திகதி: 21 ஜூலை 2025
இடம்: திருகோணமலை – சம்பூர்
திருகோணமலை மாவட்டம் சம்பூர் கடற்கரையோரப் பகுதியில் மனித எலும்புக்கூடுகள் அடங்கிய புதைகுழி ஒன்று கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதைகுழி, 1990 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலையின் பகுதியாக இருக்கலாம் என உள்ளூர் மக்கள் மற்றும் உரிமைகள் அமைப்புகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.
ஜூலை 17 ஆம் திகதி முதல், MAG (Mines Advisory Group) எனப்படும் கண்ணிவெடி அகழும் நிறுவனம், சம்பூர் கடற்கரையோரத்தில் கண்ணிவெடி அகழும் பணிகளை ஆரம்பித்திருந்தது. இந்தப் பணிகள் சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
ஜூலை 20 ஆம் திகதி, மனித எலும்புப்பாகங்கள் மற்றும் எச்சங்கள் நிலத்தினுள் இருந்து அகழப்பட்டதைத் தொடர்ந்து, அகழ்வு பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. இந்த கண்டுபிடிப்பு தொடர்பில் நீதிமன்ற அனுமதி பெற்று மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம், சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபி அருகாமையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
1990 சம்பூர் படுகொலை: ஒரு துயரமான வரலாறு
1990 ஜூலை 7ஆம் திகதி, சம்பூர் கிராமத்தில் சுமார் 57 தமிழ் பொதுமக்கள், இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சீருடை அணிந்தவர்களால் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.
இக்கொடூர சம்பவம் தொடர்பான நினைவுகள் இன்று வரை அந்த பகுதியில் உள்ள மக்களின் மனதிலும், இழந்த குடும்பங்களின் வாழ்விலும் ஆழ்ந்த காயங்களை ஏற்படுத்தி உள்ளது.
பல உடல்கள் மீட்கப்படாமலும், அடையாளம் காணப்படாமலும் இருப்பதாகவும், இராணுவத்தினரால் புதைக்கப்பட்ட மர்ம புதைகுழிகள் இன்னும் அப்பகுதிகளில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.