வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை – அமைச்சரவை அனுமதி!
கொழும்பு – [17 செப்டம்பர் 2025]
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிக்க வழிவகுக்கும் வகையில், தேர்தல் சட்டங்களை திருத்தவும், புதிய சட்டங்களை உருவாக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை அரசியலமைப்பின்படி, தற்போது வாக்காளர் பதிவேட்டில் பெயர் பதிவு செய்துள்ள மற்றும் நாட்டுக்குள் வசிக்கும் குடிமக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். தற்போதைய தேர்தல் சட்டங்களில் வெளிநாடுகளில் வசிக்கும் குடிமக்கள் வாக்களிக்க எந்தவிதமான ஏற்பாடுகளும் இல்லை.
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், இந்தியா, பங்களாதேஷ் போன்ற பல ஆசிய நாடுகளில் வெளிநாடுகளில் வாழும் தமது குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கும் சட்டங்கள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளன. இதே போன்று இலங்கையிலும் சட்டங்களை திருத்துவது காலத்தின் தேவையாகக் கருதப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, வெளிநாடுகளில் வாழும் குடிமக்களின் வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்ய தேவையான சட்ட திருத்தங்களையும், புதிய சட்டங்களை உருவாக்குவதையும் ஆராய ஒரு சிறப்பு குழுவை நியமிக்க பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அமைச்சரவையின் அனுமதியை பெற்றுள்ளார்.
இந்த குழுவில் தேர்தல் ஆணையகம், வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளிட்ட பல முக்கிய அமைச்சுகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
—
Editor: கதிர்