கடத்தல் மற்றும் கொலை: முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர் சரத் மோஹொட்டி செப்டம்பர் 24 வரை விளக்கமறியலில்!
குறுநாகல் – 19 செப்டம்பர் 2025
2010 ஆம் ஆண்டு பொத்துஹெரவில் இடம்பெற்ற கடத்தல் மற்றும் கொலைச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மோஹொட்டி, செப்டம்பர் 24 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுப் பிரிவு (CID) அதிகாரிகள் அவரை நேற்று (18) காலை கைது செய்ததைத் தொடர்ந்து, குற்றச்சாட்டுகள் தொடர்பில் நேற்று பிற்பகல் பொல்கஹாவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதிபதி மேலதிக விசாரணைகள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதே வழக்கில் ஏற்கனவே முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உளுத்தெங்கே விளக்கமறியலில் உள்ளார். 2010 ஆம் ஆண்டு கடற்படை புலனாய்வுப் பிரிவின் தலைவராக பணியாற்றிய அவர், கடத்தப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத தடுப்பு முகாமிற்கு பொறுப்பாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.