ஈஸி கேஷ் மூலம் ஐஸ் போதைப் பொருள் விற்பனை – இளம் தம்பதியர் கைது
நாவலப்பிட்டி – 27.09.2025
மகப்பேறு கிளினிக்கிற்குச் செல்வதாகக் கூறி ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த இளம் தம்பதியர் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ் தகவலின்படி, சந்தேக நபர்கள் கம்பளை மற்றும் நாவலப்பிட்டி பகுதிகளில் மோட்டார் சைக்கிளின் மூலம் ஐஸ் போதைப்பொருளை விநியோகித்துள்ளனர். பண பரிமாற்றத்துக்கு ஈஸி கேஷ் (eZ Cash) முறையே பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொலஸ்பாகை வீதியில் அமைந்துள்ள பழைய ரயில்வே உத்தியோகபூர்வ இல்லம் அருகில், பொட்டலமிடப்பட்ட ஐஸ் பெக்கெட்டுகளை மறைத்து வைத்திருந்தனர். போலீசார் நடத்திய சோதனையில் 52 பொட்டலமிடப்பட்ட (35 கிராம்) ஐஸ் பெக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
மேலும், சில பொட்டலங்கள் சந்தேக நபரான பெண்ணின் உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்றும் போலீஸ் தெரிவித்துள்ளது.
23 மற்றும் 27 வயதுடைய இந்த தம்பதியர் கம்பளை கிரபன பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் ‘டுபாய் தாரு’ என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து ஐஸ் பெக்கெட்டுகளை வாங்கி, ஈஸி கேஷ் மூலம் விநியோகித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட தம்பதியர் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
Editor: கதிர்