2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் என்னை வெல்ல வைப்பதற்கு வடக்கு மக்கள் அனைவரும் வாக்களித்தார்கள். அந்த நன்றிக் கடனுக்காகவே எனது ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வட பகுதிக்கு அதிக தடவைகள் வருகை தந்து பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுத்தேன்.உங்களின் ஆதரவை நான் என்றும் மறக்கமாட்டேன். இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அனைவரையும் சமமாகப் பார்ப்பது எமது சுதந்திரக் கட்சி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் அதாவது தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் அதிகூடிய வாக்குகளுடன் நாடாளுமன்ற உறுப்பினரை எமது கட்சி பெற்றிருக்கின்றது. இது வரலாற்றில் ஒரு முக்கியமான விடயம். அனைத்து உடுப்பிட்டி தொகுதி மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்வரும் காலத்தில் எமது கட்சிக்கு மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போதும் அதிகளவில் மக்கள் ஆதரிக்க வேண்டும். நான் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் வட பகுதியில் பல திட்டங்களை முன்னெடுத்திருந்தேன். காணி விடுவிப்பு மற்றும் வீதி புனரமைப்பு போன்ற பல்வேறு அபிவிருத்திகளை எனது ஐந்து வருட ஆட்சியில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் முன்னெடுத்திருந்தேன் என்றார்.