தனித்திருந்த மூதாட்டி கொலை தொடர்பில் வெளியாகிய தகவல்கள்!
யாழ் இராசாவின் தோட்டம் பகுதியில் தனித்திருந்த மூதாட்டி கொலை. இச்சம்பவத்தில் மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி பூபதி எனும் 72 வயதான மூதாட்டியே கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் நிகழ்ந்துள்ளது.
குறித்த மூதாட்டியின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்துவரும் நிலையில் மூதாட்டி தனிமையில் வசித்து வந்துள்ளார். வீட்டின் மேல் தளத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேர் வாடகைக்கு தங்கியிருந்துள்ளனர்.
வீட்டில் வேலை இருப்பதாகவும் வேலைக்கு ஆள் வரும் என்று கூறி அயல் வீட்டில் கோடாலி , மண்வெட்டி போன்ற பொருட்களை வாங்கி வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மதியம் மூதாட்டி அழும் சத்தம் கேட்டு அயலவர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது தலையில் காயத்துடன் செபம் சொல்லியபடி இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளார். இதன் போது வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த வரைக் காணவில்லை என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக மூதாட்டி தங்கச் சங்கிலி ஒன்று அணிந்திருப்பதாகவும் தற்போது தங்கச் சங்கிலி காணவில்லை எனவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் வேலை செய்தமைக்கான தடயங்களும் இன்னும் சில தடயங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மூதாட்டியின் தொலைபேசியும் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.
பொலிஸ் விசாரணையில் குறித்த மூதாட்டி கோடாலியால் தாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த நபரைக் கைது செய்வதற்கு யாழ் குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.