யாழ்ப்பாணத்தில் கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு!
யாழ் அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் பெண் ஒருவரைக் கொலை செய்து புதைத்த குற்றச்சாட்டில் கணவன் மனைவி மற்றும் இருவர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்து புதைத்ததாக வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.
இன்று சந்தேகநபர்களை அழைத்துச் சென்று புதைக்கப்பட்ட இடம் அடையாளம் காட்டப்பட்ட நிலையில் யாழ் நீதவான் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் மோட்டார் சைக்கிளும் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 3ம் மாதம் முதலாம் திகதி குறித்த பெண் காணாமல் போன நிலையில் மகன் செய்த முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இந்நிலையில் குறித்த கொடூர சம்பவம் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
அரியாலை மணியந்தோட்டம் உதயநகரைச் சேர்ந்த ஜெசிந்தா எனும் 42 வயதான ஒரு பிள்ளையின் தாயாரே கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்.
கணவரைப் பிரிந்து வாழும் குறித்த பெண் வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். சந்தேகநபரும் குறித்த பெண்ணிடம் ஐந்து இலட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார் எனவும் பணத்தினை வாங்கச் சென்ற போதே வீட்டினுள் வைத்து கொலை செய்து அன்று இரவே வீட்டின் பின்புறம் புதைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மறுநாள் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை 1000ரூபா சம்பளம் கொடுத்து குப்பை போடுவதற்கு எனக் கூறி கிடங்கு வெட்டியுள்ளனர். குறித்த கிடங்கினுள் கொலை செய்த பெண்ணின் மோட்டார் சைக்கிளை புதைத்துள்ளனர். சம்பளத்திற்கு கிடங்கு வெட்டியவரும் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
கைது செய்யப்பட்ட தம்பதியினரிடம் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில் பணத்தினைக் கேட்டு முரண்பட்ட போது ஏற்பட்ட அடிதடியில் பெண் இறந்ததாகவும் அதன் பின்னர் புதைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். எனினும் திட்டமிட்டு பணம் தருவதாக வரவழைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.