நெல்லை 160 ரூபாவிற்கு மேல் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளிநொச்சி பிரஜைகள் குழு செயலாளர் சிங்கராசா ஜீவநாயகம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பிரஜைகள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெவ்வேறு விவசாயிகள் தமது உற்பத்திக்கான விலையை கேள்விக்கேற்ப மாற்றிக்கொள்கின்றனர். ஆனால் நெற் செய்கையாளர்கள் மட்டும் கொள்வனவாளரில் தங்கியிருக்கிறார்.
அரசின் கொள்வனவினடிப்படையில் சந்தையில் அரிசி மலிவாக இருக்க வேண்டும். ஆனால் அரிசியின் விலையோடு ஒப்பிடுகையில் சுரண்டல் காணப்படுகிறதாகவே உள்ளது.
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரந்தன் பகுதிக்கு வந்தபோது நெல்லினை 100 ரூபாவிற்கு கொள்வனவு செய்யுமாறு கூறினார். ஆனால் விவசாயிகள் அதற்கு தயாரில்லை.
அந்த விலைக்கு விவசாயிகள் வழங்க தயார் இல்லை என ஊடகங்கள் மூலம் அறிகின்றோம். இவ்வாறான நிலையில், இந்த கொள்வனவு விலையை அவர்கள் ஏற்கவில்லை என்பது புலனாகின்றது.
இன்றைய சூழலில் உற்பத்தி செலவானது 235,000 தொடக்கம் 240,000 வரை ஏற்படுகிறது. ஆனால் அரசாங்கத்தின் சந்தை விலையினடிப்படையில் 175000 ரூபாவை விவசாலிகள் பெறுவதே அரிதாக உள்ளது.
இதனால் விவசாயிகள் ஒவ்வொருவரும் 25000 ரூபாவிற்கு மேலாக இழப்பினை சந்திக்கின்றனர். அவர்களின் உற்பத்தி செலவுக்கு மேலதிகமாக இவ்வாறு இழக்கின்றனர்.
விவசாயத்திற்கான மானியம் வழங்கப்படவில்லை. பசளை, மருந்துகள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. அதிக விலை கொடுத்து கறுப்பு சந்தையில் அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், அரசாங்கம் நெல்லிற்கான விலை நிர்ணயத்தினை 160 ரூபாவிற்கு மேல் அதிகரித்து கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடந்தாலே விவசாயிகள் தொடர்ந்தும் விவசாயத்தில் ஈடுபடலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.