சர்வதேச குற்றவியல் நீதிமன்றில்
இலங்கையைப் பாரப்படுத்துங்கள்
– ஐ.நா. மனித உரிமைகள் சபை உறுப்பு நாடுகளிடம் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கோரிக்கை
“இலங்கை தொடர்பான உண்மை நிலைவரங்களை ஓரளவேனும் வெளிப்படுத்தி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் காட்டமான அறிக்கையை வெளியிட்டு இருக்கின்ற நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை விடயத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபை மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் அதனைப் பாரப்படுத்தும் விதத்திலான தீர்மானம் ஒன்றை எடுங்கள்.”
– இவ்வாறு ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளைக் கோரியிருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாரின் இலங்கை தொடர்பான அறிக்கை குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
“இந்த அறிக்கையை ஒட்டி மூன்று விடயங்களைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
முதலாவது – இந்த அறிக்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது. இலங்கை அரசு பொறுப்புக்கூறல் விடயத்தில் தொடர்ந்து அசமந்தமாகப் பொறுப்பின்றிச் செயற்பட்டு வருவதை ஆணையாளரின் இந்த அறிக்கை அப்பட்டமாக, காட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.
இரண்டாவது – இதுவரை காலமும் ஆணையாளரின் அறிக்கை போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான கொடூரங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் பற்றியே வலியுறுத்தி வந்தது. இப்போது முதல் தடவையாகப் பொருளாதாரக் குற்றங்களுக்கும் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்பதை ஆணையாளர் வலியுறுத்தி இருக்கின்றார்.
நாட்டைச் சீரழித்த அக்குற்றவாளிகளையும் சட்டப்படி கையாளக் கோரும் அந்த வலியுறுத்தலை நாம் வரவேற்று வழிமொழிகின்றோம்.
மூன்றாவது – இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் கொடூரங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் சம்பந்தமாக அங்கத்துவ நாடுகள் உலகளாவிய ரீதியில் தமக்குள்ள சர்வதேச நீதியின் கடப்பாட்டின் அடிப்படையில், தவறிழைத்தவர்கள் மீது தத்தம் நாட்டிலேயே சட்ட, நீதி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஆணையாளர் முன்மொழிந்திருக்கும் கோரிக்கையை நாங்களும் முழுமையாக வலியுறுத்துகின்றோம்.
அதேசமயம் இவ்விடயத்தை ஒட்டி அங்கத்துவ நாடுகளிடமும் நாம் மூன்று கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.
முதலாவது – ஆணையாளரின் இந்தக் காட்டமான அறிக்கையை அடிப்படையாக வைத்து, அதனை ஒட்டி, இம்முறை இலங்கை தொடர்பில் ஒரு வலிமையான, செயல் திறனுள்ள, காத்திரமான பிரேரணை ஒன்றை முன்வைத்து தீர்மானமாக நிறைவேற்றும்படி வேண்டுகின்றோம்.
இரண்டாவது – ஆணையாளர் சுட்டிக்காட்டியபடி அங்கத்துவ நாடுகள் தமக்கு இருக்கும் உலகளாவிய பொறுப்புக்கூறல் நீதிக் கடப்பாட்டின் அடிப்படையில் இலங்கையில் தவறிழைத்தவர்களுக்கு எதிராகத் தங்கள் நாட்டில் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.
மூன்றாவது – கடந்த 13 வருடங்களாக பொறுப்புக்கூறல் விடயத்தை இலங்கை முன்னெடுக்கவேயில்லை என்ற யதார்த்த புறச் சூழலில், இலங்கையின் இந்த விடயத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பது அல்லது பாரப்படுத்துவது நீண்ட தொடர் நடவடிக்கைகளாக அமைய வேண்டும் என்பது எமக்கு தெரியும்.
அதற்கான ஆரம்பத்தை இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்படும் பிரேரணையில் இடம்பெறச் செய்வதன் மூலம் அந்த நடவடிக்கையை மேற்கொள்ளத் தொடங்குமாறு நாம் வேண்டுகோள் விடுகின்றோம்.
இந்தத் தடவை நிறைவேற்றப்படக்கூடிய தீர்மானம் இலங்கை விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நோக்கி நகர்த்துவதற்கான ஆரம்ப அடியாக இருக்க வேண்டும் என அங்கத்துவ நாடுகளிடம் வலியுறுத்துகின்றோம்” – என்றார்.