வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்ற நிலையில்,கைவிடப்பட்ட யுவதிகள் இலங்கை திரும்ப தமது உடலை விற்க வேண்டிய நிலையில், அரசாங்கத்திற்கு திருடவும் வீண் விரயம் செய்யவும் தேவையான பணம் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினரும் வெளிநாட்டில் நாங்கள் அமைப்பின் தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்
வெளிநாடுகளில் இருக்கும் இலங்கை தூதரகங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக பெண்களை மாத கணக்கில் பாதுகாப்பு இல்லததில் தங்க வைக்கின்றன.
வேலை வாய்ப்பு முகவர்கள் எஜமான்களிடம் பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொள்கின்றனர்.பெற்றுக்கொள்ளும் பணத்தை வீட்டுப் பணிப்பெண்களாக பணிப்புரியும் பெண்களுக்கு வழங்குவதில்லை.மிக குறைந்த தொகையே பெண்களுக்கு வழங்கப்படுகின்றன.
வழங்கிய பணத்தை விட அதிகளவில் பெண்களிடம் வேலை பெறப்படுகிறது. வேலை சுமையை தாங்க முடியாத காரணத்தினாலேயே பெண்கள், வேலை செய்யும் வீடுகளில் இருந்து தப்பியோடுகின்றனர்.
பெண்கள் தப்பி வந்ததும் முகவர்களுக்கு செலுத்திய பணத்தை மீண்டும் வழங்கினால் மாத்திரமே கடவுச்சீட்டு மற்றும் ஏனைய ஆவணங்களை வழங்க முடியும் என எஜமான்கள் கூறுகின்றனர்.
தூதரங்கள் முகவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக பெண்களை பாதுகாப்பு இல்லத்தில் மாத கணக்கில் தங்க வைக்கின்றனர்.
ஒரு புறம் அது நாட்டுக்கு சுமை, உணவு உட்பட தேவையானவற்றை வழங்க வேண்டும்.செய்வதறியாத யுவதிகள் உடலை விற்கும் தொழிலுக்கு சென்றாவது இலங்கை திரும்ப பணத்தை தேடும் நிலைமை காணப்படுகிறது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திடம் பல நிதியங்கள் இருக்கின்றன.அவற்றில் உள்ள பணத்தை பயன்படுத்தி யுவதிகளை நாட்டுக்கு அழைத்து வர முடியும். இலங்கைக்கு அதிகளவில் பணத்தை கொண்டு வரும் பெண்கள் விடயத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும்.
மத்திய கிழக்கில் பல நாடுகளில் பிரச்சினைகள் இருக்கின்றன எனவும் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் தெரிவித்துள்ளார்