ஜூலை முதல் புதிய மின் கட்டணம்..!
2023 மே 23
ஊடக அறிக்கை
ஜூன் மாதம் 30 ஆம் திகதி புதிய மின்சார கட்டணங்கள் அறிவிக்கப்படும். கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன
ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் புதிய மின்சாரக் கட்டணங்கள் ஜூன் 30ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் ஜூன் மாதம் 1ஆம் திகதி முன்வைக்கப்பட்ட உத்தேச கட்டணத் திருத்தம் தொடர்பான பதிலை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக விளம்பரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஜனக ரத்நாயக்க மேலும் கருத்து வெளியிட்டார்.
“இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30வது பிரிவு மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 17 வது பிரிவின் படி, கட்டண திருத்தத்தின் போது அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களும் ஆலோசனைகளும் கேட்கப்பட வேண்டும். இதன்படி, இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள 3 வீத கட்டணக் குறைப்பு முன்மொழிவு மற்றும் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட மாற்றுத் திட்டம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் கோரப்படுகின்றன.
ஆணைக்குழுவின் கட்டணத் திட்டம் ஜூன் மாதம் ஆம் திகதி அறிவிக்கப்படும். அன்று முதல் ஜூன் மாதம் 20ஆம் திகதி வரை பொதுமக்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை எழுத்து மூலமாக தெரிவிக்கலாம். கட்டண திருத்தம் குறித்து வாய்மொழியாக கருத்து தெரிவிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த கட்டண நிர்ணய செயல்பாட்டில் தீவிரமாக பங்கேற்க அனைத்து தரப்பினரையும் அழைக்கிறோம். ஏனெனில் பலரின் நேர்மறையான ஆலோசனைகள் இறுதி கட்டண முறையில் சேர்க்கப்படலாம்”
அண்மையில் இடம்பெற்ற கட்டண அதிகரிப்பின் காரணமாக குறைந்தளவு மின்சாாரத்தை பாவித்த தரப்பினர் அதிகளவு சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
“கடந்த பெப்ரவரி மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட மின்சார கட்டண உயர்வின் போது, 90 அலகுகளுக்கு குறைவாக பயன்படுத்தும் ஏழை நுகர்வோர்களிடமிருந்து நியாயமற்ற முறையில் வசூலிக்கப்பட்டது. நியாயமான கட்டணம் வசூலிக்கும் மற்றும் கட்டுப்படியாகக்கூடிய அடிப்படையில் மானியம் வழங்கப்பட வேண்டும் என்ற சட்டத்தின் விதிகளை மீறி இந்தப் பிரிவுகளில் கட்டணம் 150 சதவீதத்தில் இருந்து 250 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இரண்டு முறை மேற்கொள்ளப்பட்ட கட்டணத் திருத்தங்கள் காரணமாக, 30 அலகுகளுக்கு குறைவான நுகர்வு கொண்ட வகைகளுக்கான கட்டணமானது 1200 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கு முன்னர் 5 ரூபாய்க்கு கொள்வனவு செய்த ஒரு அலகு 66 ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது.
அரசாங்கத்தின் கணக்கெடுப்பின்படி, மிகவும் வறுமையில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 2 மில்லியனுக்கும் அதிகமாகும். இந்தக் குழு மாதம் ஒன்றுக்கு 0 முதல் 30 அலகு வரை மின்சாரத்தைப் பயன்படுத்தியது. மின்சார நுகர்வு குறித்த புதிய தரவுகளின்படி, கடந்த பெப்ரவரி மாதம் வரை மாதாந்தம் ஒரு அலகு கூட பயன்படுத்தாத மின் பாவனையாளர்களின் எண்ணிக்கை 436,000 ஆக அதிகரித்துள்ளது.
90 அலகுகளுக்கு மேல் பயன்படுத்திய சுமார் 6 லட்சம் நுகர்வோர், 60 அலகுகளுக்குக் குறைவாகப் பயன்படுத்துபவர்களாக உள்ளனர். மின் கட்டண உயர்வால் எரிசக்தி வறுமை அதிகரித்துள்ளதாக இந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையை உடனடியாக சரி செய்ய வேண்டும்
கடந்த பெப்ரவரி மாதத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட அடிப்படையற்ற மின்சார கட்டண திருத்தத்தினால் அநியாயமாக பாதிக்கப்பட்ட வீட்டு மின் நுகர்வோர், மதவழிபாட்டு ஸ்தலங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் 120 அலகுகளுக்குக்கு குறைவாகப் பயன்படுத்தும் நுகர்வோர்கள் இந்தக் கட்டணத் திருத்தத்தினால் நியாயமாக நடத்தப்பட வேண்டும்.
“வீட்டுமின் நுகர்வோர்களாகவுள்ள சுமார் 50 லட்சம் நுகர்வோர் முந்தய கட்டண உயர்வை தாங்கிக்கொள்ள முடியவில்லை. நாங்கள் முதலில் முன்மொழிந்திருந்த 35 சதவீத கட்டண உயர்வுக்குப் பதிலாக, 66 சதவீதமாக உயர்த்தப்பட்டதால்தான் இந்த நிலை ஏற்பட்டது.
எதிர்வரும் கட்டண திருத்தத்தில் இந்த நுகர்வோர்களுக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுப்போம். மேலும், வழிபாட்டுத் தலங்களில் சலுகை விலையில் கட்டணத்தை குறைக்க வேண்டும். நாட்டிற்கு அந்நிய செலாவணியை உருவாக்கும் துறைகளிலும் கவனம் செலுத்தப்படுகிறது.
சுற்றுலாத் தொழில், ஏற்றுமதித் தொழில்கள் போன்றவற்றை நிலையாகப் பராமரிக்க, ஆற்றல் செலவுகளை முடிந்தவரை குறைக்க வேண்டும்.”
ஜனக ரத்நாயக
தலைவர்
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு