யாழில் இளம் குடும்பஸ்தர் படுகொலை!
யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று முருகன் கோவிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உறவினர்கள் மூவருக்கு இடையே இன்று (10.07.2023) நள்ளிரவு 12.30 மணியளவில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இருவர் இணைந்து ஒருவர் மீது குறித்த தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது குடும்பஸ்தர் மீது கத்திக் குத்து நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து படுகாயமடைந்த நபர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
பண்டத்தரிப்பு – பிரான்பற்று பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் ராஜ்குமார் (வயது 35) எனும் நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் இருவரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.