இஸ்ரேலியத் தளபதியை தூக்கியது ஹமாஸ்!
ஆழ ஊடுருவும் படைகளின் மேஜர் ஜெனரல் சிக்கினார்?
காஸா பகுதிக்குப் பொறுப்பான இஸ்ரேலிய இராணுவத் தளபதி நிம்ரோட் அலோனி (Nimrod Aloni) ஹமாஸ் இயக்கத்தினரால் உயிருடன் சிறைபிடிக்கப்பட்டுள்ளார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. காஸா நகரில் அவரை ரீ-சேர்ட் மற்றும் உள்ளாடையுடன் ஹமாஸ் வீரர்கள் பிடித்துச் செல்கின்ற காட்சி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தக் காட்சியின் உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை. தளபதியின் கதி குறித்து இஸ்ரேல் தரப்பில் இருந்தும் எந்தவிதமான தகவல்களும் வெளியிடப்படவில்லை.
தமது இயக்கம் கைப்பற்றிய இஸ்ரேலியர்களில் “முக்கிய தலை” ஒன்றும் அடங்குவதாக ஹமாஸ் இயக்கத்தின் பிரதித் தலைவர் சாலா அல் – அரூரி (Saleh al-Arouri) அல்ஜெஸீரா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால் யார் என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை. மேஜர் ஜெனரல் நிம்ரோட் அலோனி காஸா பிராந்தியத்தின் பாதுகாப்புக்குப் பொறுப்பான கட்டளைத் தளபதியாக கடந்த ஆண்டில் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகளது தலைசிறந்த வீரர்களை உள்ளடக்கிய ஆழ ஊடுருவும் (Depth Corps) படைப் பிரிவின் கட்டளைத்
தளபதியாகவும் அவர் விளங்கினார்.
அலோனி சிறைப்பிடிக்கப்பட்ட செய்தியைப் பலஸ்தீனிய மற்றும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற ஊடகங்கள் சில வெளியிட்டுள்ளன. எனினும் மேற்குலகச் செய்தி நிறுவனங்கள் எதுவும் இன்னமும் அத் தகவலை உறுதிப்படுத்தவில்லை.
ஹமாஸ் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கம் சனிக்கிழமை காலை இஸ்ரேல் மீது திடீரெனத் தொடுத்த வான் மற்றும் தரைவழித் தாக்குதல்கள் இஸ்ரேலியர்களை நிலைகுலையச் செய்துள்ளன. காஸாவில் இஸ்ரேலிய எல்லைக்குள் முன்னேறிய ஹமாஸ் படையினர் அங்கு பல இடங்களில் இஸ்ரேலியப் படை வீரர்களையும் டசின் கணக்கான சிவிலியன்களையும் பணயக்கைதிகளாகப் பிடித்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
பெண்கள் உட்பட சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்கள் வாகனங்களில்
ஏற்றப்பட்டு ஹமாஸ் படைகளது கட்டுப் பாட்டுப்பகுதிகளுக்குக் கொண்டுவரப்படுவதைக் காட்டும் வீடியோக்கள் சமூக இணைய ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அல் அக்சா வெள்ளம் “(“Al-Aqsa Flood”)
எனப் பெயரிடப்பட்ட இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல் நடவடிக்கையில்
உயிரிழந்த இஸ்ரேலியர்களது எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது. 1,590 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தீவிரவாதிகள் ஒளிந்துள்ள காஸா பகுதி முழுவதையும் தேடிப் பிடித்து அவர்களைப் வன்மத்துடன் பழிதீர்க்கப்போவதாக இஸ்ரேலியப்
பிரதமர் பெஞ்சமின் நத்தன்யாகு சூளுரைத்துள்ளார். நாடெங்கும் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டி ருக்கிறது. இஸ்ரேலியப் போர் விமானங்கள் காஸா பகுதிகள் மீது நடத்திய தீவிர குண்டு வீச்சில் உயர்ந்த கட்டடங்கள் சில தகர்ந்துள்ளன. அதேசமயம் இஸ்ரேலியப் படைகள் ஏவிய ரொக்கெட்டுகள் லெபனானின் தென் பகுதியைத் தாக்கியுள்ளன.
இஸ்ரேலியத் தலைநகர் ரெல்அவிவுக்கான சர்வதேச விமான சேவைகள் பலவும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என்று சில நாடுகள் தங்களது குடிமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளன.