முல்லை குருந்தூர் மலைப் பகுதியில் பரம்பரை நிலத்தில் விவசாயம் செய்ய பெளத்த பிக்கு தடை!
முல்லைத்தீவு குருந்தூர் மலைப் பகுதியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று குருந்தூர் மலையில் வந்து அமர்ந்த பெளத்த பிக்கு தடை விதித்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குருந்தூர் மலைப் பகுதியில் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவந்த 7 குடும்பங்களுக்கு சொந்தமான 36 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வதற்காக சென்ற உரிமையாளர்களை அப்பகுதிக்கு வந்து அமர்ந்துள்ள பெளத்த பிக்கு மற்றும் தொல்லியல் துறையினர் இது புண்ணிய பூமியான குருந்தூர் மலைக்கு சொந்தமான புனித பூமி இங்கே விவசாயம் செய்ய முடியாது. மீறி விவசாயம் செய்தால் கைதுசெய்யப்படுவீர்கள் என எச்சரித்துள்ளனர்.
பெளத்த பிக்குவின் அச்சுறுத்தலினால் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவந்த நிலத்தில் விவசாயம் செய்ய முடியவில்லை எனவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளதுடன் தாம் தமது பரம்பரைக் காணியில் விவசாயம் மேற்கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.