நிர்வாணமாக்கி வீடியோ பதிவு செய்து கப்பம் கோரிய யாழ் இளம் தம்பதி கைது!
இளைஞனை நிர்வாணமாக்கி புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவு செய்து குறித்த பதிவுகளை முகநூலில் பதிவிடப்போவதாக கப்பம் பெற்று மீண்டும் பணம் கப்பம் கோரிய யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளம் தம்பதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இருவர் தலைமறைவாகிய நிலையில் கோப்பாய் பொலிஸார் அவர்களைத் தேடி வருகின்றனர்.
கோப்பாய் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் தம்பதியினரே கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
சந்தேகநபர்கள் முகநூலில் போலி கணக்கை உருவாக்கி அதனூடாக சாவகச்சேரியைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடன் நட்பாகியுள்ளனர். இளைஞனை கோப்பாயில் உள்ள வீட்டிற்கு அழைத்து தமது அறையில் பூட்டி வைத்து நிர்வாணமாக்கி புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவினை செய்துள்ளனர்.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பேஸ்புக்கில் பதிவிடப்போவதாக மிரட்டி இளைஞனிடம் 2இலட்சம் ரூபாவினை கேட்டு மிரட்டியதில் குறித்த இளைஞன் அச்சத்தில் அவர்களது வங்கிக் கணக்கில் இரண்டு இலட்சம் ரூபாவினை கடந்த வாரம் வைப்பிலிட்டுள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை முகநூலில் பதிவிடப்போவதாக மிரட்டி ஐந்து இலட்சம் ரூபாய் கப்பம் கோரியுள்ளனர்.
இதனால் அச்சமடைந்த இளைஞன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளம் தம்பதியினரை கைது செய்துள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
இளம் குடும்பத் தலைவர் இராணுவத்தின் வேலைப் பகுதியில் இணைந்து பணியாற்றி விலகியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தலைமறைவாகியவர்களை தேடி வருவதுடன் கைதுசெய்யப்பட்டுள்ள தம்பதியினரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.