வங்காளதேசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலின் அடிப்படையில் ஷேக் ஹசீனா 5ஆவது முறையாகவும் பிரதமராகத் தெரிவாகியுள்ளார்.
வங்காளதேசத்தில் நேற்று முன்தினம் (07) நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந்நாட்டு பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
நவ்கான்-2 தொகுதியில் வேட்பாளர் உயிரிழந்ததால், அந்த தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் ஆளும் அவாமி லீக் கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி, அதன் கூட்டணி கட்சிகள் தேர்தலை முழுமையாக புறக்கணித்தன.
வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 222 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.
பிரதமர் ஷேக் ஹசீனா, கோபால்கன்ஞ்-3 தொகுதியில் 8-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு 2.49 இலட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன.
அவரை எதிர்த்து போட்டியிட்ட வங்கதேச சுப்ரீம் கட்சியின் வேட்பாளர் நிஜாமுதீனுக்கு 469 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. இதனடிப்படையில் ஐந்தாவது முறையாக வங்காளதேசத்தின் பிரதமராக ஷேக் ஹசீனா பதவியேற்கவுள்ளார்.