பாகிஸ்தானில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
ஈரானின் புரட்சிப் படைகள் முகாம்களை இலக்கு வைத்து துல்லியத் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை நேரடியாக உறுதிப்படுத்தாத ஈரான், பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் பல்வேறு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஈரான் எல்லையையொட்டிய பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் செயற்பட்டு வரும் சன்னி பிரிவு ஜெய்ஷ் அல்-அட்ல் (Jaish al-Adl) பயங்கரவாத அமைப்பின் இரண்டு நிலைகள் மீது ஈரான் செவ்வாய்க்கிழமை ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் அதிரடி தாக்குதல் நடத்தியது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் நடத்தப்பட்ட இந்த வான்வழி தாக்குதலில் 2 சிறுவா்கள் உயிரிழந்ததுடன், சிறுமிகள் மூவர் காயமடைந்தனா்.
இந்த நிலையில், தென்மேற்கு ஈரானின் சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் பகுதியில் இன்று (18) அதிகாலை நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 7 பேர் பலியானதாக மாகாணத்தின் துணை ஆளுநர் அலிரேசா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாகிஸ்தான் – ஈரான் இடையிலான மோதல் பதற்றத்தை அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலை அடுத்து, அந்நாட்டு தூதரை பாகிஸ்தான் வெளியேற்றி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.