கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் பொது மக்கள் வசிக்கும் சில குடியிருப்புகள் பாரியளவு சேதமடைந்து காணப்படுகின்றன.
குறித்த கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டு, குடியிருப்பாளர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்படும் என மாநகர சபை நேற்று (18) தெரிவித்திருந்தது.
எனினும், ஏற்கனவே வீடுகளைப் பெற்ற சிலர் பல்வேறு காரணங்களைக் கூறி அந்த இடங்களை விட்டு இன்னும் வெளியேறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், கொழும்பு 13 பகுதியில் உள்ள 36/53 அடுக்குமாடி குடியிருப்பும் நாரஹேன்பிட்டி பகுதியில் உள்ள அபயராம அடுக்குமாடி குடியிருப்பும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன.
இந்த வீடுகளில் இருந்து வெளியேறும் குடியிருப்பாளர்களுக்கு குடியிருப்புகளை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்த போதிலும், சில குடியிருப்பாளர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல விரும்பவில்லை என்பது இங்குள்ள பிரச்சினையாகும்.
இது தொடர்பில் கொழும்பு மாநகர சபையின் பணிப்பாளர், பொறியியலாளர் ஆர்.ஏ.டி.பி. ரணவக்கவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் வழங்கிய அவர், அந்த குடியிருப்பாளர்களுக்கு புதிதாக ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு சிலர் செல்ல விரும்பவில்லை என்றும் அது தொடர்பில் எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால் தற்போதுள்ள நிலைமையை விளக்கி, அவர்களை புதிய வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் பணியை மேற்கொண்டு வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.