உயிரிழந்த பின்னணிப்பாடகியான இளையராஜாவின் மகள் பவதாரணி குரலில் பதிவு செய்யப்பட்டு, இதுவரை வெளிவராத பாடல் ஒன்றை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேற்று இரவு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, ‘அம்மாவின் வாசனை’ என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையை, இசைஞானி இளையராஜா பாடலாக இசையமைத்தார்கள். பவதாரணி அவர்களின் அழகான குரலில் அப்பாடல் பதிவு செய்யப்பட்டது. அவர் பாடிய பிறகு அந்த கவிதை முழுமை பெற்றது. இதுவரை வெளியிடப்படாத அந்தப் பாடலை, அவர் நினைவாக இங்குப் பகிர்கிறேன் என்று பாடலையும் இணைத்துள்ளார்.
முன்னதாக, மறைவு செய்தி கேட்டதும், கனிமொழி வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், இசைக் கலைஞர் பவதாரணி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பின்னணி பாடகராக தனித்துவமிக்க பாடல்களைத் தந்த அவரது மறைவு தமிழ் திரைத்துறைக்குப் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டிருந்தார்.