ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் (Moscow) இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் தாக்குதலில் 140 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் தொடர்பில் இதுவரை 11 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நால்வர் தாக்குதலுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு பிரிவினரால் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தலைநகரில் உள்ள Crocus City கட்டடத்தில் அமைந்துள்ள அரங்கில் இடம்பெற்ற இசை நிகழ்வின் போது ஆயுதம் ஏந்திய குழுவினர் நுழைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இராணுவ உடைக்கு ஒத்த உடையை அணிந்திருந்த துப்பாக்கிதாரிகள், Crocus City கட்டடத்தின் நுழைவாயில் ஊடாக உள்நுழைந்த போது அங்கு பிரபல பிக்னிக் இசைக் குழுவின் இசைக்கச்சேரி இடம்பெறவிருந்தது.
பாதுகாப்பு ஊழியரும் அவரது உதவியாளரும் பிரதான நுழைவாயிலில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த போது, ஆயுதம் தாங்கிய குழுவினரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் அரங்கிற்குள் நுழைந்துள்ளனர்.
கீழ் மாடியிலிருந்தவர்கள் மீதும் ஆயுததாரிகளால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 7300 ஆசனங்களைக் கொண்ட அரங்கில் நேற்று மாத்திரம் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடியிருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலினால் வானம் புகை மண்டலமாக காட்சியளித்ததுடன், தாக்குதல்தாரிகளினால் பெட்ரோல் குண்டுத் தாக்குதலும் நடத்தப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இசை அரங்கில் இருந்தவர்களில் சிலர் மேடையைத் தாண்டி வாகன நிறுத்துமிடத்தை நோக்கி ஓட, மற்றவர்கள் கூரை மீதேற முயற்சித்துள்ளனர். மேலும் சிலர் ஒளிந்து தமது உயிரைக் காப்பாற்றிக்கொண்டனர்.
இந்த தாக்குதல் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி இதுவரை உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை என்பதுடன், அவரது பிரதிநிதி ஒருவர் இந்த தாக்குதல் தொடர்பில் இரங்கல் செய்தியை வௌியிட்டு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதலென ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், துப்பாக்கிதாரிகளை கொல்ல வேண்டுமென பாதுகாப்பு பேரவையின் பிரதித் தலைவர் திமித்ரி மெத்வதேவ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த தாக்குதலுடன் உக்ரைன் தொடர்புபட்டிருந்தால், அந்நாட்டின் உயர் அதிகாரிகளைத் தேடி அழிக்க வேண்டுமெனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.