பாடசாலை செல்லும் வயதுடைய சிறுவர்கள், கதிர்காமம் ஆலய வளாகத்தில் யாசகம் எடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சிறுவர்கள் கதிர்காமம், செல்ல கதிர்காமம் ஆலயங்கள் மற்றும் கிரிவெஹெர விகாரையிலும் தனியாக அல்லது பெற்றோருடன் யாசகம் பெறுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் சில சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதாகவும், பெரும்பாலானோர் பாடசாலைக்கு செல்லாத சிறுவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, இந்த சிறுவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக பெற்றோரின் சம்மதத்துடன் யாசகம் எடுத்து வருகின்றனர்.
கதிர்காமம் பொலிஸார் இந்த சிறுவர்களை பொலிஸ் காவலில் எடுத்து திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதிலும் பெற்றோர்கள் அவர்களை மீட்டு, மீண்டும் அதே வேலையில் ஈடுபடுத்தியுள்ளனர்.
கதிர்காமம் ஆலய வளாகத்தில் உள்ள பூஜை பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களால் சிறுவர்கள் கூலி வேலைக்கு அமர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.