கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் இலங்கை 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுள்ளதுடன், நாடு தற்போது சரியான பொருளாதாரப் பாதையில் செல்வதை, அது உறுதிப்படுத்துவதாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.
பாடசாலைக் காலத்திலேயே தொழில்முயற்சி சூழலுக்குள் ஈர்த்தெடுப்பது அவர்களை எதிர்காலத்தில் தொழில்முனைவோராக உருவாக்க வழிவகுக்கும் என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர,
கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து ஒரு நாடாக குறிப்பிடத்தக்களவு சாதனைகளை நாம் அடைந்துள்ளோம். கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளது.
ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் சுமார் 05 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். மேலும், நம் நாட்டில் 2.5% ஆக இருந்த தொழில்முயற்சியாளர்களின் எண்ணிக்கையை 3% ஆக அதிகரிக்க முடிந்துள்ளது. நாடு தற்போது சரியான பொருளாதாரப் பாதையில் செல்வதை இந்தத் தரவுகள் உறுதிப்படுத்துகிறது.
மேலும், ஆடை மற்றும் நெசவுத் தொழில் நிறுவனம் ஏறக்குறைய 500 பிள்ளைகளுக்கு டிப்ளோமா சான்றிதழ்களை வழங்கியுள்ளது. IDB நிறுவனத்துடன் இணைந்து பாடசாலை தொழில் முயற்சியாளர் வட்டங்களை உருவாக்கி மாணவர்களை பாராட்ட முடிந்துள்ளது.
பாடசாலைக் காலத்திலேயே தொழில் முயற்சியாளர் சூழலை உருவாக்குவது மக்களை தொழில்முனைவோர் ஆக்குவதற்கு பெரும் ஆதரவை அளிக்கிறது என்பதையும் கூற வேண்டும். இதன் மூலம் நாட்டில் உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.
குறைந்த வருமானம் பெறும் 24 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதலாம் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டு வரையிலான 17 இலட்சம் பாடசாலை மாணவர்களின் போசாக்குத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், மதிய உணவு திட்டமும் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், களிமண், பித்தளை, பிரம்பு ஆகிய கைத்தொழில்களை ஊக்குவிக்கும் வகையில், இத்தாலி, கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு இந்நாட்டுப் பொருட்களை ஏற்றுமதி செய்வது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆசிய அபிவிருத்தி நிதியத்துடன் இணைந்து, சலுகை வட்டி விகிதத்தில் கடன் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
மேலும், பிரம்புகளை எடுத்துச் செல்வதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன. வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்தாலோசித்து 500 பிரம்புகள் வரை கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளோம். மேலும், களிமண் போக்குவரத்தில் அதிகபட்சமாக 05 கியுப்களை அனுமதிப்பதற்கு தேசிய அருங்கலைகள் பேரவையுடன் கலந்தாலோசித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.” என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.